Chess Olympiad: சென்னையை செஸ் தலைநகரமாக்கியவர்; விஸ்வநாதன் ஆனந்தின் முன்னோடி மானுவல் ஆரோன் தெரியுமா?

“என்னுடைய அம்மா வீட்டிலேயே சுயமாக செஸ் ஆட கற்றுக்கொண்டவர். எனக்கும் அவரே செஸ்ஸை அறிமுகப்படுத்தி வைத்தார். 6 வயதிலிருந்து செஸ் விளையாடத் தொடங்கினேன். ஒருநாள் என்னுடைய அக்கா கல்லூரி முடித்து வருகிற வழியில் ‘Chess Club’ என்றொரு போர்டை பார்த்ததாக ஆர்வமுடன் வீட்டில் வந்து கூறினார். வீட்டில் விசாரிக்கத் தொடங்கினார்கள். இறுதியில் அது ஆழ்வார்பேட்டை அருகிலிருக்கும் ‘Mikhail Tal Chess Club’ என்பது தெரிய வந்தது. வெகுவிரைவிலேயே நான் அந்த அந்த கிளப்பில் சேர்க்கப்பட்டேன்.

அந்த கிளப்பில் தினசரி நடவடிக்கைகளை கவனித்து வரும் கேசவன் என்பவரிடம், ‘வார இறுதிகளில் நடைபெறும் போட்டிகள் அத்தனையிலும் இவனுடைய பெயரும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என அம்மா கூறிவிட்டார். ‘இந்தியாவின் செஸ் முகமான தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் ‘Mind Master’ புத்தகத்தில் அவர் சிறுவயதில் செஸ் விளையாடத் தொடங்கியதை பற்றி ஒரு அத்தியாயத்தில் இப்படியாகக் குறிப்பிட்டிருப்பார். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் அந்த Tal Chess Club லிருந்துதான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரின் அத்தனை வெற்றிகளுக்கும் அத்தனை சாதனைகளுக்கும் தொடக்கப்புள்ளி அங்கேதான் இருக்கிறது.

விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான செஸ் வீரர், வீராங்கனைகள் பலருமே Tal Chess Club-லிருந்து புறப்பட்டவர்கள்தான். செஸ் தலைநகரமாக சென்னை அறியப்படுவதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்தது இந்த `Tal Chess Club’ தான்.

செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வருக… வருக… தமிழ்நாட்டிற்கு வருக’ வென ஒரு பாடல் வெளியிடப்பட்டிருக்கிறதே… அதில், பல செஸ் வீரர், வீராங்கனைகளும் வணக்கம் சொல்வது போல காட்சிகள் இருக்கும். முதலில் விஸ்வநாதன் ஆனந்த் வணக்கம் சொல்ல, அவருக்கு அடுத்ததாக முதியவர் ஒருவர் வணக்கம் சொல்லியிருப்பார். அவர் பெயர் மானுவல் ஆரோன். ‘Tal Chess Club’-ஐ பற்றி அறிய வேண்டுமெனில் முதலில் மானுவல் ஆரோனை பற்றி அறிந்தாக வேண்டும்.

மானுவல் ஆரோன் பர்மா தமிழர். 1940களில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவரது குடும்பம் தமிழகத்திற்கு குடிபெயர்கிறது. பெற்றோரின் செஸ் ஆர்வத்தால் மானுவல் ஆரோனுக்கும் செஸ் மீது காதல் ஏற்படுகிறது. செஸ் பயின்று தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் மட்டும் 9 முறை சாம்பியன் பட்டம் வெல்கிறார். ஒரு கட்டத்தில் இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையையும் பெறுகிறார். இந்தச் சாதனையை மானுவல் ஆரோன் 1961-ல் நிகழ்த்தினார். அந்தச் சமயத்தில் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்திருக்கக்கூட இல்லை. 1960, 1962, 1964 இந்த மூன்று ஆண்டுகளில் ஒலிம்பியாட் தொடர்களில் மானுவல் ஆரோனும் பங்கேற்கிறார். அமெரிக்காவின் தலைசிறந்த பாபி ஃபிஸ்சருக்கு எதிராக ஆடிய முதல் இந்தியரும் மானுவல் ஆரோன்தான்.

Manuel Aaron

1988-இல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இந்தியாவின் செஸ் முகமாக விஸ்வநாதன் ஆனந்த் மாறும் வரை அந்த இடத்தில் அழுத்தமாகப் பதிவாகியிருந்த முகம் மானுவல் ஆரோனுடையதே.

1947-லேயே தமிழகத்தில் செஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. தொடர்களை முறையாக நடத்தி வீரர்களை ஊக்குவிக்கும் ஆர்வத்தை அந்த செஸ் கூட்டமைப்பு வெளிக்காட்டவே இல்லை. இவையெல்லாம் மானுவல் ஆரோனுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. இந்தச் சமயத்தில்தான் தற்செயல் நிகழ்வுகள் சில மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகின்றன.

Manuel Aaron

தற்போது ரஷ்யாவும் உக்ரைனும் போர் புரிய தொடங்கியதன் காரணமாகத்தான் மாஸ்கோவில் நடைபெற இருந்த செஸ் ஒலிம்பியாட் ரத்தாகி சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதை ஒரு பட்டர்ஃபிளை எஃபெக்ட் என்று கூட புரிந்து கொள்ளலாம். இதேமாதிரியான நிகழ்வுகள் 1970களிலும் நடைபெற்றன. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தங்களின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த பனிப்போரில் ஈடுபட்டிருந்தன. வாய்ப்பிருக்கும் அத்தனை இடத்திலும் தங்களின் கொடியை பறக்கவிட வேண்டுமென்பதே இருதரப்பின் விருப்பம். செஸ் கட்டங்களையும் இந்தப் போர் விட்டுவைக்கவில்லை. 1972-ல் ரஷ்யாவின் போரிஸ் ஸ்பாஸ்க்கிக்கும் அமெரிக்காவின் பாபி ஃபிஸ்சருக்கும் இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி ஏறக்குறைய மூன்றாவது உலகப்போராகவே பாவிக்கப்பட்டது. இந்தியா எப்போதுமே சோவியத் சாய்வுடையதுதான்.

இந்தச் சமயத்தில்தான் இந்தோ-சோவியத் கலாச்சார பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன்படி, சென்னையிலுள்ள சோவியர் கலாசார மையத்தில் ஒரு செஸ் கிளப்பை நிறுவ சோவியத் முடிவு செய்தது.

சோவியத் கலாசார மையத்தில் ரஷ்ய மொழி பயின்று கொண்டிருந்த மானுவல் ஆரோனையே இந்த செஸ் கிளப்பை நடத்துமாறு கூறினர். அவரும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். ஏற்கெனவே இருந்த செஸ் கிளப்பின் மீது மானுவலுக்கு இருந்த அதிருப்திகளையும் குறைபாடுகளையும் பாடமாக வைத்துக் கொண்டு இந்த செஸ் கிளப்பை முறையாக நடத்த விழைந்தார்.

சோவியத் யூனியன்

செஸ் கிளப்பிற்கு `Mikhail Tal’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர் மானுவலுடைய தேர்வே. Tal சோவியத்தைச் சேர்ந்த பிரபலமான செஸ் வீரர்.

1960-ல் தன்னுடைய 23 வயதில் Mikhail Botvinik-ஐ வீழ்த்தி உலக சாம்பியன் ஆனவர் Tal. அந்தச் சமயத்தில் மிக இளம் வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்னும் பெருமையை பெற்றவர் Tal. மானுவலுக்கு விருப்பமான வீரர் இவர். இப்படித்தான் ‘Tal Chess Club’ உருவானது.

விஸ்வநாதன் ஆனந்துடைய அக்காவின் கண்ணில் யதேச்சையாக இந்த கிளப் தென்பட, 6 வயது சிறுவனாக ஆனந்தும் உள்ளே வந்தார். மானுவல் ஆரோனுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் ரஷ்யாவிலிருந்து செஸ் பற்றிய பத்திரிகைகளையும் ரஷ்ய சாம்பியன்களின் புத்தகங்களையும் தொடர்ச்சியாக வரவழைத்து அவற்றை மூலதனமாகக் கொண்டு இங்கு செஸ் பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். அப்படியான வகுப்புகளில் விஸ்வநாதன் ஆனந்த் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாராம். போட்டிகளில் தோற்றால் அடுத்த நபர் ஆடுவதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதால் தோற்கவே கூடாது என்னும் வேட்கையுடன் விஸ்வநாதன் ஆனந்த் ஆடுவாராம். இதையெல்லாம் அவரே தன்னுடைய புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபலமான வீரர்களுமே இந்த கிளப்பிற்கு வருகை தந்து இளம் வீரர்களுடன் போட்டிகளில் பங்கேற்றிருக்கின்றனர்.

செஸ் ஆர்வலர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடும் இடமாக Tal Club இருந்தது. அவர்களை முறையாக வழிநடத்தும் பொறுப்பை மானுவல் ஏற்றுக்கொண்டார். Tal Club சென்னையின் செஸ் அடையாளமாக மாறியது. சென்னை இந்தியாவின் செஸ் தலைநகரமாக மாறியது. இந்தச் சமயத்தில்தான் சோவியத் யூனியன் உடைந்தது. சோவியத் கலாச்சார மையம் ரஷ்ய கலாச்சார மையமாக மாறுகிறது. சோவியத்திடமிருந்து கிடைத்து வந்த நிதி உதவிகள் ரஷ்யாவிடமிருந்து கிடைக்காததால் ‘Tal Club’-ன் செயல்பாடுகள் முடங்கிப் போயின.

இன்றைக்கு எத்தனையோ கிளப்கள் உருவாகி விதவிதமாக வீரர், வீராங்கனைகளை உற்பத்தி செய்தாலும் தொடக்கத்தில் ஒன்றுமே இல்லாத சமயத்தில் மானுவல் ஆரோனின் பிரயத்தனங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள்தான் செஸ்ஸில் சென்னை இன்று எட்டியிருக்கும் உயரங்களுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருக்கின்றன.

Manel Aaron

மானுவல் ஆரோன் இப்போது 80 வயதைத் தாண்டிவிட்டார். ஆனால், இன்னமும் சிறார்களுக்கு செஸ் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். 1980களில் தொடங்கிய ‘Chess Mate’ பத்திரிகையை இன்றைக்கும் குடும்பத்தினரின் உதவியோடு நடத்திவருகிறார்.

“செஸ் ஒலிம்பியாடெல்லாம் இந்தியாவில் நடக்குமென நினைத்துக் கூட பார்த்ததில்லை” என மானுவல் ஆரோன் கூறியிருக்கிறார். அவரின் வாழ்நாளுக்குள்ளாகவே அந்தத் தொடரை தமிழகம் நடத்தவிருப்பதே பெரிய பெருமைதான். ஒலிம்பியாடை மட்டுமல்ல. மானுவல் ஆரோனையும் சேர்த்தே கொண்டாடுவோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.