Dosa King: பாலிவுட் படமாகும் ஜீவஜோதி – சரவணபவன் ராஜகோபால் கதை – இயக்குநர் த.செ.ஞானவேல் எக்ஸ்க்ளூசிவ்

மறைந்த சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் வாழ்க்கை மற்றும் அவருடனான ஜீவஜோதியின் சட்டப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி `Dosa King’ என்ற பெயரில் பாலிவுட் படம் ஒன்று தயாராக இருக்கிறது. மும்பையை இருப்பிடமாகக் கொண்ட ஜங்லி பட நிறுவனம் இதைத் தயாரிப்பதாக முன்பு அறிவித்திருந்தது. இந்தப் படத்தை இயக்குவது யார் என்பது மட்டும் முடிவாகாமலிருந்த நிலையில், தற்போது அது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யாவுடன் த.செ.ஞானவேல்

ஜீவஜோதி தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரும் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் தொடர்புடைய ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார். அதை மையப்படுத்தி பெரும் பொருட்செலவில் 7 மொழிகளில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தைத் தமிழில் சூர்யாவை வைத்து ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவிருக்கிறார். கோர்ட் ரூம் டிராமாவாக வெளியாகி பல்வேறு பாராட்டுகளைப் பெற்ற ‘ஜெய் பீம்’ ஆஸ்கர் வரை சென்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான படம் வட மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ‘Dosa King’ படத்தின் அடுத்த கட்டம் பற்றி இயக்குநர் த.செ.ஞானவேலிடமே விசாரித்தோம். “இந்தப் படத்தின் திரைக்கதை முன்னரே ரெடியாகி தயார் நிலையில் இருக்கிறது. படத்தை இயக்குவதை மட்டுமே என்னுடைய வேலையாக இருக்கும். இந்தப் படம் எடுப்பதற்கான சட்டப்பூர்வமான ஒப்புதல் மற்றும் உரிமையை ஜீவஜோதியிடம் பட நிறுவனம் ஏற்கெனவே பெற்றுவிட்டது. இன்னும் படத்தின் நடிகர்கள், டெக்னீசியன்கள் குறித்து எதுவும் முடிவாகவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்கினால்தான் இந்தக் கதையை நல்லபடியாகப் புரிந்து கொண்டு செயலாற்ற முடியும் என்று இந்த முடிவைப் பட நிறுவனம் எடுத்திருக்கிறது.

த.செ.ஞானவேல்

தற்போது மீண்டும் சூர்யா சாரை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் நான் இருக்கிறேன். அதற்குப் பிறகு இன்னொரு படம் இயக்கும் எண்ணமும் இருக்கிறது. இந்த இரண்டையும் முடித்துவிட்டுதான் இந்தப் பட வேலைகளுக்காக மும்பைக்குச் செல்லவிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இப்போது இயக்குநர் த.செ.ஞானவேல் சூர்யாவின் அடுத்த படத்திற்கான அடிப்படை வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். சூர்யா அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு வாடிவாசலில் கால் வைக்கிறாரா அல்லது ஞானவேலின் அடுத்த படத்தில் இறங்குகிறாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.