முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015-ம் ஆண்டு மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது திடீரென மரணமடைந்தார்.
அவரின் நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அவருக்கு நினைவிடம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஒவ்வோர் ஆண்டும் அவரின் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்திருக்கும் அவரின் நினைவிடத்தில் இன்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
காலை கலாமின் குடும்பத்தினர் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் ஜமாத் அமைப்பினர் சார்பில் சிறப்பு துஆ ஓதப்பட்டது.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் காலை 9 மணிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவார் என செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாமதமாக மதியம் 12 மணிக்குதான் ஆட்சியர் அஞ்சலி செலுத்த வந்தார். “ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று முதன்முறையாக அப்துல் கலாமின் நினைவு தினத்தில் பங்கேற்கும் இவர் இப்படி தாமதமாக வரலாமா?” என அங்கே அவரின் வருகைக்காக நீண்ட நேரமாக காத்திருந்த பல துறை அதிகாரிகள் முணுமுணுக்கத் தொடங்கினர். திடீர் அலுவல் பணி வந்ததன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக ஆட்சியருடன் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஐ.என்.எஸ் பருந்து கமாண்டர் விக்ராந்த் சபினேஷ், கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, அ.ம.மு.க, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி இன்று மட்டும் நாள் முழுவதும் அவர் நினைவிடம் பொதுமக்கள் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.