அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 5200 கோடி டாலர் ஊக்கத் தொகை வழங்கும் சிப்ஸ் சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிப் தேவைகளுக்குத் தைவான், சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய வணிகத் துறை அமைச்சர் கினா ரைமண்டோ, தேசியப் பாதுகாப்புக் கருதிச் சிப் தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்கப் பெருந்தொகை செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.
சிப் தயாரிப்பில் ஆசியாவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றப் பல்லாயிரம் கோடி டாலர்களும், சில பத்தாண்டுகளும் ஆகும் என இந்தத் துறையின் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.