சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.
பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.
பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
டாக்டர் ஷர்மிளா
பாலின சமத்துவம்…
பாலின பேதத்தைக் காரணம் காட்டி, வாய்ப்புகள் மறுக்கப்படுவதைத் தடுக்க, பொருளாதாரம் மற்றும் பிற விஷயங்கள் குறித்த முடிவுகளில் ஆண், பெண்களை சமமாகப் பங்கேற்கச் செய்வதே பாலின சமத்துவத்தின் அடிப்படைத் தேவை. அனைத்து கல்வி நிலைகளிலும் அனைத்து தரப்பிலும் அனைத்து தளங்களிலும் இந்தியா பாலின சமநிலையை அடைய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும். இதற்கான முதல் விதை குடும்பங்களில் விதைக்கப்பட வேண்டும். பாலின சமத்துவம் பேசும் குடும்ப சூழலில் வளரும் பிள்ளைகளால்தான் , அந்தச் சமத்துவம் மீறப்படும் இடங்களில் குரல் கொடுக்க முடியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பாலின சமத்துவம் என்பது இன்னமும் முழுமையான நிலையை எட்டாமலேயே இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2015-ம் ஆண்டில் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது, அதில் பெண்களுக்கு நிலம், வீடு மற்றும் வேலைகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது. ஆனாலும் இன்றும் சராசரியாக இந்திய பெண்கள் ஆண்களைவிட அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆண்களைவிட குறைவாகவே சம்பாதிக்கின்றனர், இதற்கு வறுமை, பாலின நிலைப்பாடுகள் மற்றும் சாதி அமைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம்.
பாலின சமத்துவத்தைப் பரப்புவதில் குடும்பத்தாரின் பங்கு மிக முக்கிய பங்கை வகிக்கிறது, பெரும்பாலான பெற்றோர்கள் பாலினம் குறித்த தங்கள் சொந்த நம்பிக்கைகளை தங்கள் குழந்தைகளுக்கும் கடத்துகிறார்கள். குழந்தையாக இருக்கும்போதே, ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதைப் பதியவைக்கிறார்கள். குழந்தைகளுக்கான நிறத் தேர்வு முதல் பொம்மைகள் தேர்வு வரை அந்த வயதிலேயே ஆண்- பெண் பாகுபாடு வீட்டுக்குள் ஆரம்பிக்கிறது. இந்தப் போக்கு சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்கான கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை இந்த பாலின பேதம் பிரதிபலிப்பதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்களும் பாலின பேதத்தை நம்ப ஆரம்பிக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு.
பாலின பாகுபாடோ, வன்முறையோ இல்லாத சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க முடியும். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ, என்ன நினைப்பார்களோ என்ற பயமின்றி, பிரச்னைகளை விவாதிக்க முடியும். குழந்தைகள் அறியாத, அவர்கள் விரும்பாத பாலின பாகுபாட்டை தவிர்த்து அவர்களை அவர்கள் விரும்பும் வகையில் வளர அனுமதிக்கவும் முடியும். பாலின சமத்துவம் என்பது ஒவ்வொரு நபரின் உரிமை மற்றும் சுதந்திரம். மனித உரிமைகளுக்கே அதுதான் அடித்தளம். இதைப் பெற்றோர்கள் அறிந்திருப்பதுடன், பிள்ளைகளையும் தயார்படுத்த வேண்டியது அவர்களது கடமை,
ஆஷ்லி
சிங்கிள் மதராக என்னை வளர்த்ததாலோ என்னவோ, என்னை என் அம்மா ஒரு போதும் பெண் என்ற பார்வையில் பார்த்ததோ, நடத்தியதோ இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் எனக்கான பாலபாடமாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றாலும், என் நட்பு வட்டத்தில் பலரும் வீட்டுக்குள் பாலின பேதத்தை அனுபவித்த கதைகளைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பெற்றோரின் மீதான அவர்களது கோபத்தையும் பார்த்து அதிர்ந்திருக்கிறேன். பிள்ளைகளாகிய நாங்கள் பெற்றோரை அப்படிப் பார்ப்பதில்லையே….
பாலின சமத்துவத்தை எப்படியெல்லாம் வலியுறுத்தலாம்?
வகுப்பறைகளில் ஆண்களையும் பெண்களையும் தனித்துப் பார்க்காதீர்கள், பிரிக்காதீர்கள்.
வகுப்பறையிலும் சரி, வீட்டிலும் சரி, பெண்கள் தங்கள் கருத்தை முன்வைக்கும்போது, ஆண் பிள்ளைகள் இடையீடு செய்ய அனுமதிக்காதீர்கள்.
படிப்பு, வேலை என எல்லா தளங்களிலும் ஆண்களும் பெண்களும் இணைந்து செயல்படுவதை ஊக்கப்படுத்துங்கள்.
பாலின பாகுபாட்டை குறிக்கும் வார்த்தைப் பிரயோகங்களை எந்த இடத்திலும் அனுமதிக்காதீர்கள்.
பெண் குழந்தைகளுக்கு பிங்க், பார்பி டால், ஆண் பிள்ளைகளுக்கு நீலம், கார் பொம்மை என சிறுவயதிலேயே பாலின பாகுபாட்டை விதைக்கும் விஷயங்களைப் பழக்குவதைத் தவிருங்கள்.
– ஹேப்பி பேரன்ட்டீனிங்!