திருமலை : ஆந்திராவில் பெய்த கனமழையால் கால்வாயை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைநீரில் வீடுகள் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை கரிக்கல்பாடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கண்ணய்யா வழக்கம்போல் காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொய்யாலகுடேம் மண்டலத்தில் உள்ள கண்ணபுரம்- புட்டைகுடம் இடையே கண்ணபுரம் மேற்கு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முதலில் குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் அனைத்தும் கால்வாயை கடந்து செல்லாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன. ஆனால், கண்ணய்யா கால்வாயை காரில் கடந்து சென்று விடலாம் என முயற்சி செய்தார். சிறிது நேரத்தில் வெள்ளநீர் அதிக அளவில் வந்தது. உடனே, கார் திடீரென வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. காரை கயிறு கட்டி மீட்க முயற்சி செய்த நிலையில் காரில் கட்டப்பட்ட கயிறு அறுந்ததால் வெள்ளநீரில் கார் அடித்து செல்லப்பட்டது. அனைவரும் பார்த்து கொண்டிருக்கும்போதே கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடிவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து, காரில் இருந்த ஆசிரியர் கண்ணய்யாவை அப்பகுதிமக்கள் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர்.இதேபோல், புட்டய்யகுடம் பகுதியில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளநீரை மக்கள் கடக்காமல் சாலையில் நின்று கொண்டிருந்தனர். திடீரென ஒருவர் வெள்ளநீரை கடந்து செல்ல முயற்சி செய்தார். இதில், அவர் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டார். அவர் யார்? என்று தெரியவில்லை. இருப்பினும், அவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் அப்பகுதிமக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.