ஜெனீவா,
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகிறது. இது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது.
பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக பாதுகாப்பு நல்கினாலும் கூட குரங்கு அம்மைக்கு என பிரத்யேகமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நம்மிடம் இப்போதுள்ள பெரியம்மை தடுப்பூசிகள் எல்லாம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகள். அவையும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கின்றன.
குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக நாடுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும். மரபணு பகுப்பாய்வு தரவுகளை உலக நாடுகள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். குரங்கு அம்மை இன்னொரு பெருந்தொற்றாக உருவாகமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.