கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நபர் – 2 மணி நேரத்திற்கு முன்பு கதவை தட்டிய அதிர்ஷ்டம்

கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நேரத்தில் லாட்டரியின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் கேரளாவில் குடும்பம் ஒன்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் டவுன் அருகே உள்ள பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது என்கிற பாவா. 50 வயதான இவர், பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமினா (45). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் ஆனநிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் 2000 சதுர அடியில் புதிதாக வீடு கட்டி முகமது குடும்பத்தினர் குடியேறியுள்ளனர். 
இதனைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே முகமதுவின் 2-வது மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து கடன் வாங்கி கட்டப்பட்ட வீடு மற்றும் மகள்களுக்கு திருமணம் செய்துவைத்த செலவு என சுமார் 50 லட்சம் ரூபாய் வரை முகமது குடும்பத்தினருக்கு கடன் இருந்துள்ளது. வங்கி மற்றும் உறவினர்களிடம் வாங்கிய கடனால் கடந்த 4 மாதங்களாக தவித்து வந்த முகமது- அமினா தம்பதி, புதிதாக கட்டிய வீட்டை 45 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்து இடைத்தரகரிடம் பேசியுள்ளனர்.
ஆனால் வீட்டை வாங்கும் நபர் 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வாங்கிக் கொள்வதாக தெரிவித்ததால், கவலையடைந்த நிலையில், மனமில்லால் வீட்டை விற்க ஒத்துக் கொண்டுள்ளனர். இவரின் அடுத்த 2 மகள்கள் 12-ம் வகுப்பு படிக்கும்நிலையில், 22 வயதான மகன் கத்தாரில் உள்ள எலக்ட்ரிக் கடையில், விற்பனையாளராக வேலை கிடைக்கவும் அங்கு சென்றுள்ளார். எனினும் பணத் தேவை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 மணியளவில் இடைத்தரகருடன் வீட்டை வாங்கும் நபர் முன்பணம் கொண்டு வந்து தருவதற்காக முகமது குடும்பத்தினர் காத்திருந்தனர். இதற்கிடையில் வேலை காரணமாக மதியம் 1 மணியளவில் மஞ்சேஸ்வரம் சென்றுள்ளார் முகமது.
image
அப்போது முகமது, 4 லாட்டரி சீட்டுகளையும் வாங்கி வந்துள்ளார். சரியாக வீட்டை வாங்கும் நபர் வருவதற்கு 2 மணிநேரம் முன்னதாக, அதாவது 3 மணியளவில் முகமது வாங்கிவந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. வரி பிடித்தம் போக சுமார் 63 லட்சம் ரூபாய் வரை முகமதுவின் கைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையறிந்த முகமது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளளனர். வீட்டை விற்க முயன்று வாடகை வீட்டுக்கு முகமது குடும்பம் செல்லவிருந்தநிலையில், 50 லட்சம் ரூபாய் கடன் அடைவதற்கு பணம் கிடைத்துள்ளது என்பதால், அவரது குடும்பத்தினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வீட்டை வாங்கும் நபர் இடைத்தரகருடன் வந்தபோது வீட்டை தற்போதைக்கு விற்கும் எண்ணம் இல்லை என்று முகமது தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.