தங்கவயல : பங்கார்பேட்டை, வி.கோட்டா, முல்பாகல் உட்பட பல்வேறு இடங்களை சேர்ந்த சிலர், தங்கவயலில் குழந்தைகளுடன் வந்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ‘இனிமேல் பிச்சை எடுக்கக்கூடாது’ என எச்சரித்தனர்.தங்கவயலின் முக்கிய சாலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று முன்தினம், ‘ரவுண்ட்ஸ்’ வந்தனர். அப்போது, 10 பெண்கள், 14 குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது தெரிந்தது. அவர்களை ராபர்ட்சன் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
அவர்கள் அனைவரும் கோலாருக்கு அழைத்து செல்லப்பட்டனர். 50 வயது பெண், 1 வயது குழந்தை வைத்திருந்தார். தன் குழந்தை என்றும், உறவினர் குழந்தை என்றும் முன்னுக்குப் பின் முரணாக கூறினார். குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வாடகைக்கு வாங்கி வருவது தெரியவந்தது.இதை தொடர்ந்து அதிகாரிகள், ‘இனி பிச்சை எடுத்தால், கடுமையான தண்டனை கிடைக்கும்; குழந்தைகளை பராமரிக்க காப்பகம் உள்ளன. அதில் சேர்த்து கொள்கிறோம்’ என தெரிவித்தனர். ‘இனி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க மாட்டோம்’ என அவர்கள் தெரிவித்தனர்.
காப்பகம்
தங்கவயலில் நடைபாதைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில், பூங்கா, சாலைகளில் படுக்கும் வீடற்ற ஏழைகளுக்காக, ஆண்டர்சன்பேட்டை சூசைப்பாளையம் பகுதியில் தங்கவயல் நகராட்சியின் சார்பில், ‘மறுவாழ்வு மையம்’ ஏற்படுத்தி உள்ளனர்.இங்கு படுக்கை, பெண்களுக்கு தனி அறைகள், சாப்பாடு, கழிப்பறை, குளியலறை, பொழுதுபோக்க, ‘டிவி’ ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எல்ஷடாய் ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பினர், 10 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.பொறுப்பாளர் இளங்கோ கூறுகையில், ”தங்கவயலில் யாருமே பிச்சை எடுக்க கூடாது; வீடின்றி தெருக்களில் படுக்க கூடாதென்று, நகராட்சி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது,” என்றார்.பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த பெண்களை வளைத்து பிடித்த அதிகாரிகள். அவர்களை தனியிடத்தில் வைத்து விசாரித்தனர். வீதிகளில் படுத்து துாங்கியவர்கள், பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடம்: ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement