சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள காவல் துறையினர், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
போட்டி தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார். விமானநிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.
சுமார் 50 நிமிடங்கள் ஒய்வெடுக்கும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமர், நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.
அங்கு அவர் பாஜக நிர்வாகிகள், அதிமுகவின் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினரை சந்திக்கிறார். நாளை மறுநாள் காலை 9.50 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 69 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு சென்னை விமானநிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத்துக்கு செல்கிறார்.
எஸ்.பி.ஜி. பாதுகாப்பு
பிரதமர் வருகையை முன்னிட்டு 60-க்கும் மேற்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர் (எஸ்.பி.ஜி.) சென்னையில் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். சென்னை நகரம் முழுவதும் நாளை காலை முதல் நாளை மறுநாள் மாலை வரை காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறது.
சென்னை காவல் ஆணையர் தலைமையில், 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உள்பட 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
நிகழ்ச்சிகள் நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், தங்குமிடமான கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னை விமானநிலையம், அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், செல்லும் வழித்தடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டு, சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதே போல, ரயில், பேருந்து நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, சென்னை விமானநிலையத்தில் பிரதமர் ஓய்வெடுக்க உள்ளதால், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானப் படையினர் நேற்று பிரதமருக்கான ஹெலிகாப்டர்களை சென்னை விமானநிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறுக்கு இயக்கி, ஒத்திகை பார்த்தனர்.
பிரதமர் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட வரவேற்பு
சென்னை வரும் பிரதமரை வரவேற்க பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பரதநாட்டியம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்யவும், கட்சித் தொண்டர்களை திரட்டி வரவேற்பு அளிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் வருகை
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து 256 வீரர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர்.
குறிப்பாக, பலாவு குடியரசு, மியான்மர், சைப்ரஸ், உக்ரைன், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷ்யா, கேமன் தீவுகளைச் சேர்ந்த 25 பேர், கஜகஸ்தான், பாலஸ் தீனத்தைச் சேர்ந்த 11 பேர், ஓமன், அங்கோலா, தான்சானியா, ஜிம்பாப்வே, புருண்டி, மால்டா, நைஜீரியா, ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்லோவேனியா, பாகிஸ்தான், ஹங்கேரி, பிஜி, ரொமானியா, டென்மார்க், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, அரூபா, டிரினிடாட் அண்டு டொபாகோ, கயானா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த 107 வீரர்கள் என 143 பேர் நேற்று காலை சென்னை வந்தனர்.
தொடர்ந்து, மங்கோலியா, பர்படாஸ் நாடுகளைச் சேர்ந்த 10 பேர், பிரான்ஸ், இத்தாலி, எரித்ரியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, சீன தைபே, மலேசியா, லாவோஸ், பிரேசில், ஐஸ்லாந்து, பக்ஸ்சம்பர்க், போர்ட்டோரிகோ, பெர் முடா, அமெரிக்கா, எஸ்வாட்னி, கொலம்பியா, தென்கொரியா, கொரியா, கேமரூன், மங்கோலியா, பொலிவியா நாடுகளைச் சேர்ந்த 103 பேர் பிற்பகலுக்கு மேல் வந்தனர். இவர்களை தமிழக விளையாட்டுத் துறை அதிகாரிகள் வரவேற்று, தங்கவைத்தனர்.