செங்கல்பட்டு அருகே 76 குரங்குகளை ஒரு சிறிய கூண்டுக்குள் வனத்துறை அதிகாரிகளே அடைத்து வைத்த சம்பவம் பலரது கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. அருகில் இருந்த வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழைந்த குரங்குகள், அங்கிருந்த வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உடைப்பது, உணவுப் பொருட்களை திருடிச் செல்வது என பல சேஷ்டைகளை செய்துள்ளன.
இதையடுத்து, ஊருக்குள் இருக்கும் குரங்குகளை பிடித்துச் செல்லுமாறு பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தன. இதன்பேரில், அச்சரப்பாக்கம் பஞ்சாயத்து ஊழியர்களும், வனத்துறையினரும் இணைந்து அங்கு சுற்றித்திரிந்த 300-க்கும் மேற்பட்ட குரங்குகளை கடந்த வாரம் பிடித்தனர். பின்னர் அவற்றை கூண்டுகளில் அடைத்து வைத்தனர். இதன் ஒருபகுதியாக, ஒரு சிறிய கூண்டுக்குள் 76 குரங்குகள் இறுக்கிபிடித்து அடைத்து வைக்கப்பட்டன. இதனால் கூண்டுக்குள் இருந்த குரங்குகள் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் சிரமப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த விலங்கு ஆர்வலர்கள், இந்த செயலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பான செய்தி சில ஊடகங்களிலும் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, அந்த குரங்குகளை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் விட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “சிறிய கூண்டுக்குள் 76 குரங்குகளை அடைத்து வைத்தது தவறுதான். அரை மணிநேரத்துக்கு பிறகு அவை வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டன” என்றார்.
“கிராம மக்கள் குரங்குகளுக்கு உணவு கொடுக்காமல் இருந்தாலே, குரங்குகள் ஊருக்குள் வருவதை நிறுத்திவிடும். இந்த விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும்” என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM