புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அதனால் அவரிடம் இன்றுடன் விசாரணை நிறைவு பெறலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் ராகுலிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணையை முடித்துள்ளனர்.
மற்றொரு பங்குதாரரான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், கடந்த 21ம் தேதி முதற்கட்ட விசாரணை நடந்தது. இந்நிலையில் நேற்று (ஜூலை 26) 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடந்தது. நேற்று, மொத்தம் சுமார் 6 மணி நேரம் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையில் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரான சோனியா காந்தியிடம் 70க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. சோனியா காந்தி பதில்களை துரிதமாக அளித்ததாகவும் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அமலாக்கத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. அவரிடம் 5 நாட்களுக்கு 150 கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில் சோனியா காந்தி மூன்றாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகிறார். முதல் இரண்டு நாட்களும் சோனியாவுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் சென்றார். ஒரு மருத்துவக் குழுவும் தயார் நிலையில் விசாரணை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.