தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
200 யூனிட்டுகளுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்திபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 25.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல இரண்டு மாதங்களுக்கு மொத்தமாக 400 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 147.50 முடிவு செய்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழகத்தின் மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.