சென்னை: மாமல்லபுரத்தில் நாளை(ஜூலை 28) செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ள நிலையில், இதற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும் விளம்பரம் செய்திருந்தது. அதில் பிரதமர் மோடியின் படம் இல்லை என பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் மோடி படத்தை, தமிழக அரசின் விளம்பரங்களில் பா.ஜ.,வினர் ஒட்டினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை மறுநாள் துவங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில், நாளை துவக்க விழா மற்றும் ஆக., 10ல் நிறைவு விழா நடக்கிறது. இப்போட்டியில், சர்வதேச 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகளின், 2,000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இவ்விழா தொடர்பாக தமிழக அரசின் விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பா.ஜ., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் மெய்யநாதன், பிரதமர் மோடியின் படம் எங்கும் புறக்கணிக்கவில்லை, போட்டியை துவக்கி வைப்பதே பிரதமர் தான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பா.ஜ.,வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பா.ஜ.,வினர் ஒட்டினர்.
இது தொடர்பாக அமர் பிரசாத் கூறுகையில், ‛இது திமுக நிகழ்ச்சி அல்ல. சர்வதேச செஸ் ஒலிம்பிக் போட்டி. பிரதமர் புகைப்படத்தை போடாதது மிகப் பெரிய குற்றம்’ என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement