தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை: தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

“பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.  ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கோடியக்கரை ராம்சர் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 4 இடங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால், தமிழ்நாட்டில் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மூன்று ஈரநிலங்களுக்கு (சதுப்பு நிலங்கள்) ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச அங்கீகாரம் அடைந்துள்ளது. சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை இராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அதாவது, ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோளாகும்.  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ராம்சர் அடையாளப் படுத்துகிறது. இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதற்கும் அதனை பேணுவதற்கும் இந்த அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இயற்கை ஈரநிலங்களை அறிவுசார் வகையில் பாதுகாப்பதற்கு இந்த அரசு ஈரநிலங்கள் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது.  தற்போது கிடைத்துள்ள ராம்சர் அங்கீகாரம், இந்த அரசின் முயற்சிக்கு கிடைத்த பயனாகும். ராம்சர் அங்கீகாரம் என்பது தேசிய மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பிற்கும், இயற்கை வளங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஈரநிலங்களை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.