ஜூனியர் மாணவர்களை அருவருக்கத்தக்க வகையில் ராகிங் செய்த மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மருத்துவ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரியாக உள்ளது MGM மெடிக்கல் காலேஜ். இந்த கல்லூரியில் படிக்கும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஜூனியர் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மாணியக் குழுவை (UGC) தொடர்புகொண்டு எம்.ஜி.எம். கல்லூரியில் நடக்கும் அக்கிரமங்களை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
அதில், “மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேரும் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் பலரும் ராகிங் என்ற பெயரில், சக மாணவர்களுடனும், தலையணைகளுடன் உடலுறவு கொள்ளும்படி நடிக்கச் செய்கிறார்கள்.
மாணவிகளை பற்றி ஆபாசமாக பேச வைப்பது, செல்ஃபோன்களை பிடுங்கி வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவும், அடிக்கும் சத்தம் அனைவருக்கும் கேட்கும்படி இருக்க வேண்டும் எனக் கூறுவது போன்ற பல கொடூரங்களை செய்து வருகிறார்கள். இவற்றை பேராசிரியர்களும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.” எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.
இதனையடுத்து யு.ஜி.சி தரப்பில் இருந்து புகாருக்கு ஆளான கல்லூரியை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. பின்னர் UGCன் ராகிங்கிற்கு எதிரான குழு இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்திருக்கிறது.
அதன்படி FIR போடப்பட்டு, MGM மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருக்கிறது. இதனை வைத்து ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை இந்தூர் போலீசார் அடையாளம் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM