புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 50 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் ராகுலிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணையை முடித்துள்ளனர். மற்றொரு பங்குதாரரான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், கடந்த 21ம் தேதி 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 28 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இந்நிலையில் நேற்று 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடந்தது. காலையில் 3 மணி நேர விசாரணைக்குப்பின் அவர் மதிய உணவுக்குக்காக வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மாலை 3.30 தொடங்கிய விசாரணை 6.30 மணி வரை நடந்தது. நேற்று, மொத்தம் சுமார் 6 மணி நேரம் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் தலைமையில் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து, விஜய் சவுக் வரை அவர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் இடைமறித்து கைது செய்தனர். அதன்பின் பேட்டியிளித்த ராகுல் காந்தி, “காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் இங்கு வந்துள்ளனர். அவர்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து பேசினர். நாங்கள் இங்கு அமர போலீஸார் அனுமதிக்கவில்லை. இதுதான் இந்தியாவின் உண்மை நிலவரம். இது போலீஸ் அரசு. பிரதமர் மோடிதான் மன்னர்” என கூறினார்.
காங்கிரஸ் தலைவர்கள் ரஞ்சீத் ரஞ்சன், கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், திக்விஜய் சிங், தீபீந்தர் ஹூடா மற்றும் மல்லிகார்ஜூன கார்கே உட்பட காங்கிரஸ்எம்.பி.க்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேற்று 2-ம் கட்ட விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 3-ம் கட்ட விசாரணைக்காக இன்றும் ஆஜராகும்படி சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.