மணிலா: பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள தீவான அம்ராவில் இன்று (புதன்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக ஆக பதிவாகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கட்டிடங்கள் பலவும் சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை.
பிலிப்பைன்ஸின் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பின் சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பலரும் இருந்தனர். எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் அங்கு விடுக்கப்படவில்லை.
ரிங் ஆஃப் ஃபயர்: ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கிவுள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.