இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயக வழிமுறைகள்,நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரமீட்சியை அடையவிரும்பும் இலங்கைமக்களின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென பிரதமர் மீண்டும்வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா இலங்கை இடையிலான நெருக்கமானதும், தொன்மைவாய்ந்ததும், நட்புரீதியிலானதுமான உறவை வலுவாக்கவும் மக்களின் பரஸ்பர நலனுக்காகவும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.