குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷிவா விஹார் காலனியைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவருக்கு மாநில மின்வாரியத்தில் இருந்து ரூ.3,419 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் வந்தது. அதிர்ச்சியடைந்த பிரியங்கா குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்றே தெரியாது குழம்பம் அடைந்தனர். அப்போது பிரியங்கா குப்தாவின் மாமனாருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பமே பெரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அவர்களது உறவினர்கள் நடந்த விஷயத்தை கேட்டறிந்தனர். பின்னர் மின்வாரியத்திடம் மின் கட்டணம் ரூ.3,419 கோடி குறித்து விளக்கம் கேட்டனர். அந்த பில்லை பார்த்து அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் பிரியங்கா குப்தாவின் மின் கண்டன விபரம் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. ரூ.1,300 என்பதற்கு பதிலாக ரூ.3,419 கோடி என்று தவறாக பதிவாகி உள்ளது. உண்மையான தொகையை அவர்கள் செலுத்தினால் போதுமானது என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் அறிவித்துள்ளார்.