விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகேயுள்ள சு.பில்ராம்பட்டு ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அருகாமையில் உள்ள மகளிர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த இவர், பொதுத்தேர்வில் 411 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த நிலையில், விவசாயக் கூலி வேலை செய்துவருவதாகக் கூறப்படும் மாணவியின் பெற்றோர், அவருக்குத் திருமண ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை விரும்பாத மாணவி, தான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என கேட்டிருக்கிறாராம். ஆனால், குடும்பச் சூழலை நினைத்த மாணவியின் பெற்றோர் மேல்படிப்புக்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, தங்களுடைய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால், தங்களுக்குச் சொந்தமான கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி அதிகாலையில் பார்த்தபோது, மாணவி உள்ளே இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை மீட்ட உறவினர்கள், உடலை தங்கள் வீட்டுக்குக் கொண்டு சென்றதோடு, பிரேத பிரிசோதனை செய்ய மறுத்து வீட்டின் முன் அஞ்சலிக்காக வைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைத் தடுப்பு மையம் – 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் – 1091