அகமதாபாத்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் விஷ சாராயம் குடித்து 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மது அருந்தவும் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தடையை மீறி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் குஜராத்தின் போடாட் மாவட்டம், பர்வலா தாலுகா, ரோஜிட் என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை ரோஜிட் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கிக் குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் பர்வலா, போடாட் மற்றும் சுற்றுப்புற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்கள் போடாட் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைத் தொழிலாளர்கள் ஆவர். விஷ சாராயத்துக்கு 28 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாவ்நகர் மண்டல போலீஸ் ஐஜி அசோக் குமார் யாதவ் நேற்று முன்தினம் போடாட் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறுவோரை பார்வையிட்டார்.
இச்சம்பவம் குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி டிஸ்பி அந்தஸ்து அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு பதிவு செய்து இக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளச் சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக இதுவரை பலரை பிடித்து இவர்கள் விசாரித்து வருகின்றனர்.
குஜராத் மாநில காவல்துறை இயக்குநர் ஆசிஷ் பாட்டியா கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக மதுபான தடைச் சட்டம் 302, 328, 120பி ஆகியவற்றின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பர்வலா, ரான்பூர் மற்றும் அகமதாபாத் புறநகர் காவல் நிலையங்களில் 3 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்நிலையில் குஜராத் போலீஸ் வட்டாரங்கள் நேற்று கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் அந்த கிராமத்தில் சாராயத்தில் மெதில் என்ற ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதை குடித்தவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மெதில் ரசாயனத்தை எமோஸ் என்ற நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் கிடங்கு மேலாளர் ஜெயேஷ் என்கிற ராஜு தனது உறவினர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரத்துக்கு 200 லிட்டர் மெதில் ரசாயனம் விற்பனை செய்துள்ளார்” என்று தெரிவித்தன.
இதனிடையே, குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.