தெலுங்கானா: ஹைதராபாத் அருகே பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பைக்குடன் காவல் துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று கனமழையின் காரணமாக ஹிமயட்சகர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக அதில் இருந்த 4 மதகுகள் 2 அடி உயர்த்தப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக டி.எஸ்.பியா முதல் ராஜேந்திரா நகர் வரை சர்வீஸ் சாலைகள் அனைத்தும் நீரால் மூழ்கியது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ள நீரில் சிக்கிக்கொண்டார். அங்கு இருந்த போக்குவரத்து காவல் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரத்திற்கு பின்னர் இளைஞரையும், வாகனத்தையும் மீட்டனர். இது குறித்து அறிந்த சம்சாபாத் காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்தரா மீட்பு குழுவினரை பாராட்டினார். பொதுமக்களுக்கு இதுபோன்ற இடையூறான சூழலில் காவல் துறை உதவ வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். ஹைதராபாத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முசி நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு ஹைதராபாத், ரெங்காரெட்டி, சம்சாபாத் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.