₹3,419 கோடிக்கு கரண்ட் பில்: ஷாக்கான நபருக்கு சிகிச்சை; மின்வாரியம் சொன்னது என்ன தெரியுமா?

இந்திய மக்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் ஒரே விவகாரமாக இருப்பது மின்சார கட்டணம்தான். மின்சாரத்தால் ஷாக் வருகிறதோ இல்லையோ மின்சார கட்டணத்தை கண்டு ஷாக் ஆகுபவர்கள்தான் ஏராளமாக இருப்பர்.
அப்படியான சம்பவம்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. குவாலியரைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவரின் மாமனார் தனது வீட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு கட்டணமாக 3,419 கோடி ரூபாய் என வந்ததை கண்டு உடல்நலம் குன்றி போயிருக்கிறார்.
image
இது தொடர்பாக மின்சாரத் துறையை அணுகி கேட்டபோது தெரியாமல் நடந்துவிட்டதாக அலட்சியமாக பதிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குவாலியரின் ஷிவ் விஹார் காலனியைச் சேர்ந்த தம்பதிதான் சஞ்சீவ் கன்கானே – பிரியங்கா குப்தா. “ஜூலை மாதத்திற்கான மின்சார கட்டணத்தை கண்டதும் எனது தந்தை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து மத்தியப் பிரதேச மின்வாரிய துறையான மத்திய க்‌ஷேத்ர வித்யுத் வித்ரான் நிர்வாகத்திடம் கேட்டபோது தவறுதலாக நடந்ததாக கூறியிருக்கிறார்கள். பின்னர் திருத்தியமைக்கப்பட்ட கட்டண விவரத்தில் 1,300 ரூபாய் என வந்திருக்கிறது.” என சஞ்சீவ் கன்கானே தெரிவித்துள்ளார்.
image
மத்தியப் பிரதேச மின்வாரியத்தின் பொது மேலாளர் நிதின் மங்லிக் பேசியபோது, இந்த அளவுக்கான மின்கட்டணம் பதிவிட்டது மனித தவறு, எத்தனை யூனிட் உபயோகித்திருக்கிறார்கள் என்ற இடத்தில் கன்ஸ்யூமர் நம்பரை பதிவிட்டதால் ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேச மாநில மின்துறை அமைச்சர் பிரதியுமான் சிங் தோமரும், தவறாக கட்டணத்தை பதிவிட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.