11 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது
சூலுார்
: சூலுார், சுல்தான்பேட்டை பகுதியில் இரு நாட்களில், 11 கிலோ கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.சூலுார் இன்ஸ்பெக்டர் மாதையன், எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத்
மற்றும் போலீசார், சூலுார் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, சந்தேகத்துக்கு உரிய வகையில் சென்ற இருவரை பிடித்து
சோதனையிட்டனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக்
மாலிக், 32 மற்றும் சூலுாரை சேர்ந்த சுரேந்திரன், 30 என்பது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த, எட்டு கிலோ
கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.இதேபோல், சுல்தான்பேட்டை அடுத்த செலக்கரச்சல்
பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் நடத்திய சோதனையில், மூன்று
கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்கி
ரம்பரிக்,38 என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
27 நாட்டு வெடிகளுடன் திரிந்த வாலிபர் கைது
விழுப்புரம் : செஞ்சி அருகே காப்பு காட்டியில் 27 நாட்டு வெடிகளுடன் நின்றிருந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிறுவாடி காப்பு காட்டில், வன சரக காவலர்கள் நேற்று காலை 11:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு தாலுகா மேல் வில்லிவலத்தை சேர்ந்த சேட்டு மகன் சதீஷ், 20; என்பதும், அவர் வைத்திருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27 நாட்டு வெடிகள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, செஞ்சி வன சரக காவலர்கள் வழக்கு பதிந்து சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், 27 வெடிகளை பறிமுதல் செய்தனர்.
மகள் மாயம் தந்தை புகார்
திருவெண்ணெய்நல்லுார் : மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது 19 வயது மகள் பி.எஸ்சி., படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தந்தை அளித்து புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குழியில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி
பொள்ளாச்சி : நெகமம், வெள்ளாளபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான முட்டைக்கோழி பண்ணையில், அசாம் மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.அங்கு பணியாற்றும் அஜய்ராதா, 28, அவரது மனைவி ருவிசும்பி ராதா, 26, ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அவர்களது மகன் நெர்சன் ராதா, 3, அங்கு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள குழிக்குள் தவறி விழுந்தார். இதை யாரும் பார்க்காததால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, குழந்தையை காணவில்லை என, தேடியுள்ளனர்.அப்போது குழிக்குள் சிறுவன் இறந்து கிடந்தான். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை கேலி செய்த இருவர் கைது
புதுச்சேரி : டில்லியை சேர்ந்தவர் அவதார்சிங் மகள் கங்காமதீப் காரூர்,33; இவர், தனது தோழிகளோடு நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். இங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், கடற்கரைக்கு சென்றனர். காந்தி சிலை அருகே, மாலை 5.00 மணிக்கு கடல் அழகை ரசித்த போது, இரு வாலிபர்கள் அவர்களிடம், ஆபாசமான செய்கைகளை காட்டி, கேலி, கிண்டல் செய்தனர்.
அப்போது, அங்கு ரோந்து வந்த பெரியக்கடை போலீசாரிடம், கங்காமதீப் கரூர் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.அவர்கள், கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் ரகு,29; நெய்வேலி டவுன்ஷிப் கதிர்வேலு மகன் சதீஷ்,27; ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
விமானத்தில் சிக்கியரூ.30 லட்சம் தங்கம்
கோல்கட்டா : மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, ஒரு இருக்கையின் அடியில் உள்ள குழாயில், 12 துண்டுகளாக தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறிய அளவிலான 12 தங்கக் கட்டிகள் ஒரு கறுப்பு ‘டேப்’பில் சுற்றப்பட்டு, பயணியர் இருக்கையின் அடியில் உள்ள குழாயில் செருகி வைக்கப்பட்டிருந்ததை எடுத்தோம். 600 கிராம் எடையில் இருந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு, 30.87 லட்சம் ரூபாய். இவற்றை விமானத்தில் மறைத்து வைத்து கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த வாரம் உ.பி.,யின் வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில், ஒரு பயணி கடத்தி வந்த, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூதாட்டிக்கு தைலம் தடவிசெயின் பறித்த மர்ம பெண்
மதுரவாயல் : மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, உடல் வலிக்கு தைலத்தை தடவி தருவதாக கூறி, நுாதன முறையில் செயின் பறித்த பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொத்தியம்மா, 90. இவர், தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு, நேற்று முன்தினம் வந்த இளம்பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் குடிவந்துள்ளதாக அறிமுகப்படுத்தி கொண்டார்.
சிறிது நேரம் பேச்சு கொடுத்த அப்பெண், உடல் வலிக்கு தைலத்தை தடவி விடுவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய மூதாட்டி சம்மதம் தெரிவித்துள்ளார்.அப்போது, மர்ம பெண் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை கழற்றி வைத்து, தைலம் தடவியுள்ளார்.பின், தான் எடுத்து வந்த கவரிங் செயினை மூதாட்டி கழுத்தில் போட்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரையடுத்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவியின் நகை, பணம்திருடிய கணவருக்கு ‘காப்பு’
ஆவடி : மனைவியை ஏமாற்றி நகை, பணம் திருடியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி அடுத்த மிட்டனமல்லி ஸ்ரீநகரை சேர்ந்தவர் ப்ரீத்து, 30. இவரது கணவர் அலிசன், 41. இவர், ரேஷன் கடையில் பறக்கும் படையில் பணியாற்றி வருகிறார்.
அலிசன், தினமும் குடித்து வந்து ப்ரீத்துவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், ப்ரீத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, அதே பகுதியில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அலிசன், ப்ரீத்துவிடம் இருந்த 15 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாயை திருடி சென்றார். புகாரின்படி, ஆவடி மகளிர் போலீசார் விசாரித்தனர்.இதையடுத்து, தலைமறைவாக இருந்த அலிசனை நேற்று கைது, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளர் கைது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, பி.ஏ.பி., அலுவலகத்தில், தடையில்லா சான்று வழங்க, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, நீர்வளத்துறை உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, திப்பம்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் வேங்கை செல்வபிரபு. இவர் விளைநிலத்தை மனைப்பிரிவாக மாற்ற, நகர ஊரமைப்பு இயக்கக ஒப்புதல் பெறுவதற்கு, தடையில்லா சான்று கோரி, பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.அங்குள்ள உதவி பொறியாளர் செந்தில்குமார், 32, தடையில்லா சான்று வழங்க, இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வேங்கை செல்வபிரபு, கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் லதா மற்றும் பரிமளம் ஆகியோர், நேற்று நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.வேங்கை செல்வபிரபுவிடம், 30 ஆயிரம் ரூபாயை, உதவி பொறியாளர் செந்தில்குமார், லஞ்சமாக பெற்ற போது, போலீசார் அவரை கைது செய்தனர். கைதான செந்தில் குமார், ஒட்டன்சந்திரத்தை சேர்ந்தவர். தற்போது, பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உதவி பெறியாளராக பணியாற்றுகிறார். வேட்டைக்காரன்புதுாரில் உள்ள பி.ஏ.பி., குடியிருப்பில் வசிக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடமான் வேட்டைநான்கு பேர் கைது
பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு, மானந்தவாடி அருகே, வரையாள் என்ற இடத்தில் நேற்று காலை, வனச்சரகர்கள் சஜீவன்,ஆனந்த் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதி வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில், கடமான் இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ‘வரையாள் பகுதியை சேர்ந்த சுரேஷ், 42, மகேஷ்,29, ரிண்டோ,32, மனு,22, ஆகியோர், வனவிலங்குகளை வேட்டையாடி, ரிசார்ட்களுக்கு, தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தனர்,’ என, தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரியில் எல்லையோர வனப்பகுதிகளில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடும்ப பிரச்னை: போலீஸ்காரர் தற்கொலை
ஆவடி : கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி, கோவில் பதாகை, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 39. இவர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கலைச்செல்வி, 30. இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். திருநாவுக்கரசுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி வழக்கம் போல், குடித்துவிட்டு வந்தார்; தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கலைச்செல்வி கோபித்துக் கொண்டு, புரசைவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், நேற்று முன்தினம் திருநாவுக்கரசு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்