துபாயிலிருந்து மும்பை வந்த சங்கர் ஹன்மையா என்வரைக் கடந்த மாதம் 22-ம் தேதி மும்பை விமான நிலையத்தில் மூன்று பேர் கடத்திச் சென்றனர். அவர்கள் சங்கரை மும்பையிலிருந்து சென்னைக்குக் கடத்தினர். பின்னர் சங்கர் அங்கிருந்து புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். சங்கரின் மகன் மும்பை சயான் போலீஸில் தன் தந்தையைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கடத்தல் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் சங்கர் மகனுக்கு மர்ம நபர் போன்செய்து,“சங்கரை விடுவிக்கவேண்டுமானால், 15 லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும்” என்று மிரட்டினான்.
கடத்தப்பட்ட சங்கர் தன் மகனுக்கு மர்ம போன் நம்பரிலிருந்து போன் செய்தார். அந்த போன் சிக்னலை வைத்து போலீஸார் சங்கர் இருக்கும் இடத்துக்குச் சென்றனர். அதில் சங்கர் புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் மும்பை போலீஸாரும் புதுச்சேரிக்குச் சென்று அங்கு முகாமிட்டுத் தேடி வந்தனர். இதனால் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் கடத்தல்காரர்கள் சங்கர் இருக்கும் இடத்தை உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவித்துவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்த மாதம் 2-ம் தேதி சங்கர் மீட்கப்பட்டார். கடத்தல்காரர்களைக் கைதுசெய்ய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கடத்தல்காரர்கள் பெயர் ஒளரங்கசீப் அக்பர், விஜய் வாசுதேவன் என்று தெரியவந்தது. இருவரும் மேலும் ஒருவரைச் சேர்த்துக்கொண்டு இந்தக் கடத்தலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதில் அக்பர் தமிழ்நாட்டின் திருவள்ளூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வாசுதேவனையும் கைதுசெய்தனர். இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ராஜாவைத் தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்டது ஏன்?
சங்கர் ஏன் கடத்தப்பட்டார் என்பது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது குறித்து சயான் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்தோஷ், “சங்கர் துபாயிலிருந்து இந்தியா வருவதைத் தெரிந்துகொண்டு வாசுதேவனும், அக்பரும் அவரிடம் கமிஷன் தருவதாகக் கூறி இரண்டு தங்க மாத்திரைகளைக் கொடுத்துச் சாப்பிடச்செய்திருக்கின்றனர். ஒவ்வொரு மாத்திரையும் 160 கிராம் எடை கொண்டதாகும். ஒவ்வொரு தங்கத்தின் மதிப்பும் ரூ.16 லட்சம் ரூபாய் எனக்கூறப்படுகிறது. மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் சங்கரை அக்பர் தன் நண்பர்கள் வாசுதேவன், ராஜா ஆகியோருடன் சேர்ந்து அங்குள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று ஒரு மாத்திரையை மட்டும் எடுத்தனர்.
மற்றொரு மாத்திரை வெளியில் வரவில்லை. பின்னர் சயானில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி ஒரு நாள் முழுக்க நன்றாகச் சாப்பிடக் கொடுத்துப்பார்த்தனர். அப்படியும் மாத்திரை வரவில்லை. இதையடுத்து அவரை சென்னைக்குக் கடத்த முடிவு செய்தனர். விமானத்தில் சங்கருக்கு அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கொடுத்தனர்.
இதன் மூலம் இரண்டாவது தங்க மாத்திரையை எடுத்துவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் சங்கர் மகன் போலீஸில் புகார் செய்ததால் சங்கரை அவர்கள் புதுச்சேரிக்குக் கடத்தினர். தங்கத்தை சங்கரிடமிருந்து எடுக்க முடியாத காரணத்தால் அவர் குடும்பத்தை மிரட்டி ரூபாய் 15 லட்சம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டல் விடுத்தனர். இரண்டாவது தங்க மாத்திரை என்னவானது என்று சங்கரிடம் கேட்டதற்கு, மும்பை விமான நிலையம் வரும் முன்பாக தவறுதலாகக் கழிவறை சென்ற போது வெளியேறி இருக்கலாம் என்றார்” எனத் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.