சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதன் தொடக்கவிழா நாளை நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு விமான மூலம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், 800-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் ஏற்கெனவே சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலையம் வரும் வீரர் வீராங்கனைகளை தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் செஸ் கூட்டமைப்பினர் வரவேற்று, அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மூலம் மாமல்லபுரம் அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று சென்னைக்கு 1045 வீரர் வீராங்கனைகள் வருகை தரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்திற்கு 745 வீரர் வீராங்கனைகளும், உள்நாட்டு முனையத்திற்கு 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளும் வரவுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை துருக்கி, சவுதி அரேபியா, ஈரான், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, சிலி, ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 321 வீரர், வீராங்கனைகள் வந்துள்ளனர்.