பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தி அதன் சேவைகளை விரிவுப்படுத்தவும், ஊரகப் பகுதிகளுக்கு 4ஜி இணையதள சேவைகள் முழுமையாக கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அளித்துள்ளது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இனிவரும் காலங்களில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும் என்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கப்படும் எனவும் மத்திய அரசு கருதுகிறது.
ஆகவே பிஎஸ்என்எல்-ஐ நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பிஎஸ்என்எல்-ன் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் பிஎஸ்என்எல் புதிய முதலீடுகளை மேற்கொண்டு ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மூலம் 4G தொலைத்தொடர்பு சேவைகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க இயலும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு போதிய நிதி உதவி அளிக்கப்படவில்லை என்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு பிஎஸ்என்எல் க்கு கூடுதல் வலு சேர்க்கும் என கருதப்படுகிறது.
பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதற்கு புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதன் இருப்புநிலைக் குறைப்பு மற்றும் பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்புகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும். அதே போலவே 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 5 மாநிலங்களில் உள்ள 44 முன்னோடி மாவட்டங்களில் 7,287 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஊரகப் பகுதிகளில் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிவேக தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அத்துடன் நாட்டின் எல்லை பகுதிகளில் வலுவான தொடர்பு சேவைகள் அங்குள்ள பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் எனவும் மத்திய அரசு விரும்புகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM