எனக்கு பல வருடங்களாக பல் கூச்சம் இருக்கிறது. இதனால் பல் கூச்சத்துக்கான பேஸ்ட் பயன்படுத்துகிறேன். பல் கூச்சத்துக்கு என்ன காரணம்? அதற்கான பேஸ்ட்டை தினமும் பயன்படுத்துவது சரியானதா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
பொதுவாக பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்துபோய், அதையடுத்த `டென்ட்டின்’ லேயர்( Dentin) எக்ஸ்போஸ் ஆவதால்தான் பற்களில் கூச்ச உணர்வு ஏற்படும். பற்களில் கூச்சம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானது தவறான பிரஷ்ஷிங் முறை.
அதாவது சரியான முறையில் பல் துலக்காதது. பல் துலக்கும்போது ரொம்பவும் அழுத்தியோ, கடினமாகவோ தேய்ப்பது, தவறான திசைகளில் தேய்ப்பது, தவறான பிரஷ் உபயோகிப்பது போன்றவற்றால் எனாமல் தேய்ந்து போகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
அதனால் உள்ளே உள்ள டென்ட்டின் லேயர் எக்ஸ்போஸ் ஆகும். அதன் விளைவாகவும் பல் கூச்சம் அதிகரிக்கும்.
அடுத்தபடியாக உங்களுக்கு ஈறுகளில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் வேர்கள் வெளியே எக்ஸ்போஸ் ஆகி, அதன் காரணமாகவும் பல் கூச்சம் அதிகரிக்கலாம். சிலருக்கு உறக்கத்தின்போது பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும்.
இது பல நாள்களாகத் தொடரும்பட்சத்திலும், பற்களில் கூச்ச உணர்வு அதிகரிக்கும். முன்பு நீங்கள் பற்களுக்கு ப்ளீச்சிங் மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலவகை வைட்டமின் குறைபாடும் இதற்கு காரணமாகலாம்.
பற்களின் கூச்சத்தில் இருந்து விடுபட, சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்காலிகத் தீர்வாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பற்களின் கூச்சத்துக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் நிரந்தர தீர்வு.
பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல் தற்காலிக தீர்வை மட்டுமே தொடர்வது காலப்போக்கில் பற்கள் தொடர்பான பிரச்னைகளை அதிகப்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.