கர்நாடக மாநிலத்தில், பாஜக இளைஞரணி நிர்வாகி வெட்டி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில், பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் நேற்று இரவு தனது கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, அரிவாளால் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீன் நெட்டாரு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 தனிப்படை போலீசார் கேரள மாநிலத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க விரைந்துள்ளனர்.
பிரவீன் நெட்டாருவின் படுகொலைக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகியவை காரணமாக இருக்கலாம் என, சில வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இதை அடுத்து, பாஜக தலைமையிலான மாநில அரசு, கட்சித் தொண்டர்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறி விட்டதாகக் கூறி, கர்நாடகாவின் பல பகுதிகளில் பாஜகவின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இந்த கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. அப்பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.