‘அவன் குறுக்க போய்டாதீங்க சார்!’- ‘தி லெஜண்ட்’ திரை விமர்சனம்

நடிப்பதற்கு நம்பிக்கை மட்டும் போதுமா? கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்ய வேண்டுமல்லவா? எந்த விதமான காட்சியாக இருந்தாலும் ஒரு உணர்ச்சியற்ற நடிப்பையே வழங்கியிருக்கிறார்.

‘தி லெஜெண்ட்’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது. ட்ரெய்லரும், படத்திற்கான ப்ரமோஷன்களும் அதை இன்னும் அதிகப்படுத்தியது. படத்திற்கு எழுந்த ஹைப் நியாயமானதுதானா?

ஒரு விஞ்ஞானி, மக்கள் போற்றும் லெஜண்டாக எப்படி மாறினான் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

சரவணன் (படத்திலும் பெயர் சரவணன் தான்) உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி. அதிலும் மரபணு சார்ந்த ஆராய்ச்சியிலும், நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட் என எக்கச்சக்க பில்டப்புகளுடன் அறிமுகமாகிறார். பல நாடுகளில் அவரை அழைத்தும், நாட்டுக்கும், மக்களுக்கும் தான் என்னுடைய சேவை தேவை என்று சொல்லி இஸ்ரேலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புகிறார் டாக்டர் சரவணன்.

மேளதாளம் முழங்க பட்டாசான வரவேற்பு, இனி என்னுடைய வாழ்க்கை என்னுடைய மக்களுக்கு தான், இவர்களுக்கு தேவையானதை செய்யப் போகிறேன் (அட எத்தன தரம் சொல்லுவிங்க லெஜண்டு?) என வீட்டு வாசலில் நின்று பேட்டி கொடுக்கிறார். பால்ய நண்பன் திருப்பதி (ரோபோ ஷங்கர்) உடன் ரீ-யுனியன், அக்மார்க் கிராமத்துப் பெண் துளசி (கீத்திகா) பார்த்ததும் காதல், ரெண்டு சீன் முடிந்ததும் கல்யாணம் என ஜவுளிக்கடை விளம்பரம் போல ஜாலியாக போகிறது கதை.

image

திடீர் என ஏற்படும் ஒரு மரணத்தால் இனி என்னோட பாதை ‘ஒரு மருந்து, ஒரே ஒரு மருந்துல’ சர்க்கரை நோய குணப்படுத்தும் மருந்தக் கண்டுபிடிக்கிறது என ஆராய்ச்சியில் இறங்குகிறார். இன்சுலின் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் விஜே (சுமன்)வுக்கு டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதனால் ரஜினியைப் பழிவாங்க சுமன் என்ன செய்தார் (அய்யோ அது சிவாஜி படமோ). இதற்குப் பிறகு தனக்கு வரும் தடைகளைத் தாண்டி சரவணன் மருந்தைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்பது தான் மீதிக் கதை.

ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதை, கமர்ஷியல் அம்சங்களும் அடங்கிய பக்கா பேக்கேஜ் தான். இதில் பொருந்த முடியும் என்று நடித்திருக்கும் சரவணனின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள். ஆனால் நடிப்பதற்கு நம்பிக்கை மட்டும் போதுமா கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்ய வேண்டுமல்லவா? எந்த விதமான காட்சியாக இருந்தாலும் ஒரு உணர்ச்சியற்ற நடிப்பையே வழங்கியிருக்கிறார். ஹீரோயினாக கீர்த்திகா, முக்கிய கதாபாத்திரத்தில் ஊர்வசி ரௌடலா ஆகியோரும் கதாபாத்திரத்திற்கான முழுமையை அளிக்கவில்லை.

image

மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் இது. சில காட்சிகள் டப்பிங்கிலும், சில காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் அவரின் குரலும் எனக் கடைசியாக அவரை திரையில் காட்டும் முயற்சியில் வென்றிருக்கிறார்கள். ஆனால், படத்தின் காமெடி காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். விஜயகுமார், பிரபு, சுமன் எனப் படத்தில் பல நடிகர்களை இதுவரை நாம் எப்படி சினிமாவில் பார்த்திருக்கிறோமோ அதே கதாபாத்திரம், அவர்களும் அதை வழக்கம்போல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதில்லாமல் ரோபோ சங்கர், தேவதர்ஷினி ஆளுக்கு ஒரு காட்சியில் ஸ்கோர் செய்கிறார்கள்.

படத்திற்கு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றும் ஆட்களை ஒன்றிணைத்ததும், பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்ததும் சேஃப் மூவ். படம் ஓரளவு பார்க்கும் படி இருக்க காரணமே அதுதான். ஹாரீஸின் பாடல்களும், பின்னணி இசையும் ஏற்கெனவே பெரிய ஹிட். அதிலும் மொசலோ மொசலு, கோனே பாடல்கள் கேட்க சிறப்பாக இருந்தது. வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தை படு கலர்ஃபுல்லாக காட்சிபடுத்தியிருக்கிறது. அனல் அரசு ஸ்டண்ட் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.

image

டெக்னிகலாக படத்தை கச்சிதமாக உருவாக்கியிருந்தாலும், படத்தின் கதையும் காட்சிகளையும் பார்க்கும் போது ஷங்கரின் சிவாஜி படம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. வெளிநாட்டில் கிடைக்கும் பணம் புகழை தவிர்த்து இந்தியா வரும் ஹீரோ, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார், அதை வியாபார நோக்கத்துக்காக தடுக்கும் வில்லன், அந்த தடைகளை தாண்டி எப்படி ஹீரோ வெல்கிறார் என டிட்டோ அதே கதைக்களம். ஒரு சில காட்சிகளில் கூட சிவாஜியின் சாயலையும் பார்க்க முடிந்தது.

அந்த சாயலைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் கூட, படமாக ஒவ்வொரு காட்சியும் விளம்பரப் படம் பார்ப்பதைப் போல மிக செயற்கையாக இருந்தது. எந்த இடத்திலும் பார்வையாளனுக்கு ஆர்வத்தையோ, சுவாரஸ்யத்தையோ தராமல் சோர்வை மட்டுமே தருகிறது படத்தின் திரைக்கதை.

கதையில் மெனக்கெடலும், நாயகனுக்கு நடிப்புத் திறமையும் மிகமிகமிக அதிக அளவில் இருந்திருந்தால் கமர்ஷியல் படமாக வென்றிருக்கும்.

– பா. ஜான்சன்

இதையும் படிக்கலாம்: இதுவேற லெவல்; அடுத்தடுத்து வெளியானது 3 படங்களின் அப்டேட்டுகள் -தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.