புதுடெல்லி: இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 20 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே நேற்று 50 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இந்நிலையில் மக்களவையில் அமளிக்கு இடையே ஊக்கமருந்து தடுப்பு மசோதா நேற்று நிறைவேற்றப் பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு வழக்கம் போல் தொடங்கின. இரு அவைகளிலும் எம்.பி.க்கள் 23 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டது, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த அமளிக்கு இடையே மக்களவையில் ஊக்கமருந்து தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கோஷங்கள் எழுப்பி, காகிதங்களை கிழித்து அவைத் தலைவர் இருக்கை முன் வீசினார். இதனால் அவர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.
50 மணி நேர உண்ணாவிரதம்
இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 20 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே 50 மணி நேர தொடர் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இரவு முழுவதும் காந்தி சிலை அருகே அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபடப்போவதாக திரிணமூல் எம்.பி டோலா சென் கூறினார். இதற்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள், திமுகவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் 2 பேர், ஆம் ஆத்மி கட்சி எம்பி ஒருவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டு, அவைக்குள் பதாகைகளை காட்ட மாட்டோம் என உறுதியளித்தால் அவர்களின் இடை நீக்கத்தை அவைத் தலைவரால் ரத்து செய்ய முடியும். மத்திய நிதியமைச்சர் கரோனாவிலிருந்து குணமடைந்து திரும்பியதும், விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க நாங்கள் தயார் என கூறிவருகிறோம். எதிர்க்கட்சிகள் விரும்பினால், விவாதத்தை இன்று முதல் எங்களால் தொடங்க முடியும்’’ என்றார்.