கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி அப்துஸ்ஸமத் சமாதானி (Abdussamad Samadani), விசாரணைக் கைதிகள் மரணம் தொடர்பான கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, இந்தியா முழுக்க கடந்த 2020-21 நிதியாண்டில் 1,940 விசாரணைக் கைதிகள் உயிரிழந்திருப்பதாகவும், 2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 2,544 விசாரணைக் கைதிகள் உயிரிழந்திருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 4,484 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த (2021-22) ஆண்டைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 501 பேரும், மேற்கு வங்கத்தில் 257 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 201 பேரும் உயிரிழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2020-21 நிதியாண்டில் 63-ஆக இருந்த விசாரணைக் கைதிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை, 2021-22 நிதியாண்டில் 109-ஆக அதிகரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதாவது, முன்பைவிட தமிழ்நாட்டில் விசாரணைக் கைதிகளின் மரணம் 73 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.