உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு மாணவர் கும்பலிடையே நடைபெற்ற மோதல், கடந்த மூன்று மாதங்களாக அந்தப் பகுதியில் தொடர் நாட்டு வெடிகுண்டு தாக்குதலுக்கு வழிவகுத்திருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், பிரயாக்ராஜ் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகப் பள்ளி மாணவர்கள் 11 பேரை போலீஸ் இன்று கைதுசெய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில், 10 பேர் சிறார்கள் என்றும், போலீஸார் அவர்களைச் சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கும், மற்றொருவரை சிறைக்கும் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் போலீஸ் தரப்பு, கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்த போலீஸ் விசாரணையில், அந்தப் பகுதியின் பிரபலமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சொந்தமாகக் கும்பலை உருவாக்கி, அங்கு ஆதிக்கம் செலுத்துவதற்காகச் சண்டை மற்றும் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த மாணவர்கள், தாண்டவ், இம்மார்டல்ஸ், ஜாகுவார், மாயா, லாரன்ஸ் போன்ற பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியிருப்பதாகவும், அதில் 10 முதல் 300 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் மட்டும் வெவ்வேறு பள்ளிகளுக்கு வெளியே குறைந்தது 5 வெடிகுண்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
கடந்த திங்களன்றுகூட, சிவில் லைன்ஸில் உள்ள பிஷப் ஜான்சன் கல்லூரிக்கு அருகில் பல மாணவர்கள் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடத்தில் போலீஸார் விசாரித்ததில், “நாங்கள் வேறெங்குமிருந்தும் வெடிகுண்டுகளைக் கொண்டுவரவில்லை. யூடியூப் பார்த்து நாங்களே நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தோம்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.