சியோல் :’போர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அமெரிக்கா, தென் கொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்’ என, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கிழக்காசிய நாடான வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன், தொடர்ந்து அமெரிக்கா, தென் கொரியா நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். சர்வதேச நாடுகள் எதிர்ப்பை மீறி அணு ஆயுதச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் தன் வழக்கமான மிரட்டலில் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கொரியா போரின் 69வது ஆண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில அவர் பேசியதாவது:
நம்முடைய ராணுவம் எந்தவித சூழ்நிலையையும், சவாலையும் எதிர்கொள்ளும் திறமை கொண்டது. தேவைப்பட்டால், உடனடியாக அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் நம் படைகள் தயார் நிலையில் உள்ளன.
அமெரிக்கா, தென் கொரியா போன்றவை தொடர்ந்து நம்மை தூண்டி விட்டு வருகின்றன. தற்போது கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறுகின்றனர். இரட்டை வேடம் போடும் இந்த நாடுகள், நம்மை போர் சூழ்நிலையில் தள்ளப் பார்க்கின்றன. அவ்வாறு போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து வடகொரியா இன்னும் மீளவில்லை. இந் நிலையில், ராணுவ நிகழ்ச்சியில், மக்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement