புதுடெல்லி : குடியரசு தலைவரின் மனம் புண்பட்டு இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் சவுத்ரி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, ‘ராஷ்டிரபதி என்பதற்கு பதிலாக ராஷ்டிரபத்தினி’ என்று கூறினார். இது தனிப்பட்ட பெண்ணின் பாலினத்தை மிக பெரிய அளவில் விமர்சிக்கும் வார்த்தை என கூறி பாஜவினர், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதைத்தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் எம்பிக்கள், கைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஒரு பெண்தான் எனவும் அக்கட்சியினை சேர்ந்த ஒருவர் கூறும் இத்தகைய விமர்சனங்களை காங்கிரஸ் எப்படி ஆதரிக்கிறது எனவும் கேள்விகளை எழுப்பினர்.இதுபற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘குடியரசு தலைவரின் மனம் புண்பட்டு இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார். தவறுதலாக நான் ராஷ்டிரபத்னி என கூறிவிட்டேன். இதற்காக நீங்கள் இப்போது என்னை தூக்கிலிட வேண்டும் என விரும்பினால், செய்யுங்கள். தண்டனையை ஏற்க தயார். நான் பேசியதற்கு சோனியா காந்தியை ஏன் இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டும்? குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணம் இல்லை. தவறுதலாக பேசி விட்டேன். ஆளும் கட்சி உள்நோக்கத்துடன் மடுவை மலையாக்க முயற்சி செய்கிறது’ என கூறியுள்ளார்.