செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடி சமூக நீதியின் காவலர் என புகழாரம் சூட்டினார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு மாமல்லபுரத்தின் கோயில் உருவச்சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் குரலில் முப்பரிமாண வடிவில் காட்சிகளை விவரிக்கும் நிகழ்த்துக்கலை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார். அப்போது, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கிய பிரதமர் மோடி சமூக நீதியின் காவலராக தமிழகம் வந்துள்ளார். தமிழக மக்கள், தமிழர்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை கொடுத்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடக்க மிக முக்கிய காரணம் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின்’’ என்று கூறி நன்றி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து ஃபிடே தலைவர் அர்காடி வோர்கோவிச் உரையாற்றினார். அப்போது, மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்வதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் அனைத்தையும் நிகழ்ச்சிகள் மூலம் காணமுடிந்தது’’ என்று பேசினார்.
அவரையடுத்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘’வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டை காணும் வாய்ப்பை பெற்றுள்ளோம். விளையாட்டுத் துறைக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் பிரதமர்.
உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை இந்தியா வரவேற்கிறது. அடிப்படை நிலையிலிருந்து வீரர்களின் திறமையை மேம்படுத்தும் திட்டங்களை இந்தியா வகுத்துள்ளது. விளையாட்டுத்துறைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கேலோ இந்தியா திட்டத்தின்மூலம் இந்தியாஅல் 300க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி’’ எனப் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM