சாத்தூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்யக் கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் தாமோதரன் (50) பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் கூறப்பட்ட புகாரையடுத்து, அவரை போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். இதனால், ஆசிரியர் தாமோதரனை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், நேற்று அப்பள்ளி மாணவர்கள் கணித ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை, அவரை விடுதலை செய்து மீண்டும் பள்ளியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரை தாங்கள் வகுப்பறைக்குச் செல்ல மாட்டோம் என்றும் கூறி வகுப்பு களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி பெறுமாறு அவர் கூறியுள்ளார். அதையடுத்து, மாணவர்கள் மனு எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தனர். கல்வித் துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பாக கூறி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் உறுதி அளித்தார்.
பள்ளியில் பயிலும் 268 மாணவர்களில் 172 மாணவர் கள் கணித ஆசிரியர் திரும்ப வர வேண்டும் என்று கோரிக்கை மனுவை தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். பின்னர் போராட் டத்தைக் கைவிட்டு மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர்.