சீனியர் நடிகரின் பிறந்தநாளை வீட்டிற்கே சென்று கொண்டாடிய சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி, அந்த பந்தா எதுவும் இல்லாமல் சக நடிகர்களுடன் ரொம்பவே தோழமையுடன் பழகி வருபவர். குறிப்பாக தற்போதைய இளம் நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்தால் கூட, எந்தவித மறுப்பும் சொல்லாமல் விழாக்களில் கலந்து கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இன்னொரு பக்கம் திரையுலகை சேர்ந்தவர்களின் குடும்ப விசேஷங்களிலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் மிகவும் சீனியர் நடிகரான கைகலா சத்தியநாராயணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கே சென்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கைகலா சத்திய நாராயணாவுடன் பல படங்களில் சிரஞ்சீவி இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரது வீட்டிற்கு சென்று அவரது பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார். சிரஞ்சீவி கட்டும் இந்த அன்பினால் சத்திய நாராயணாவின் குடும்பத்தினர் நெகிழ்ந்து போய் உள்ளனர்.