சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் ‘ஹர் கர் திரங்கா’ நிகழ்ச்சியை ஆகஸ்ட் 13, 14, 15-ம்தேதிகளில் கொண்டாட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் ‘ஹர் கர் திரங்கா’ நிகழ்ச்சியை ஆகஸ்ட் 13, 14, 15-ம்தேதிகளில் கொண்டாட அரசு உத்தேசித்துள்ளது.
இதையொட்டி, அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், தேவையான கொடி களைத் தயாரித்து, விநியோகிக்கவும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.