சுவிட்சர்லாந்திலுள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையே ஹேக்கர்கள் ஹேக் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 60,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை அந்த ஹேக்கர்கள் ஹேக் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
அந்த நிறுவனங்களின் முக்கிய தரவுகள் மற்றும் பாஸ்வேர்டுகள் முதலானவை வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, பொலிசார் அந்த ஹேக் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
அந்த சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஜெனீவா மாகாண அரசு, பொது மருத்துவமனை, ஜெனீவா பல்கலை மருத்துவமனை மற்றும் ஜெனீவா விமான நிலையம் ஆகியவற்றுடன், தனியார் வங்கிகள், சட்ட நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் அடங்கும் என்பதால் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.