திருச்சி கே.கே.நகரிலுள்ள திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய ரைபிள் கிளப் சார்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
31-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வயது வரை), ஜூனியர் (21 வயது வரை), சீனியர் (21-45 வயது வரை), மாஸ்டர் (45-60), சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என பல்வேறு பிரிவுகளில் இதுவரை 1300 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை கார் மூலமாக திருச்சி கே.கே.நகரிலுள்ள ரைபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித்குமார் வந்தார். அங்கு 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மாஸ்டர் பிரிவில் கலந்துகொண்டு, இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். காலையிலேயே நடிகர் அஜித்குமார் திருச்சிக்கு வந்த தகவல் சமூகவளைத் தளங்களில் பரவ ஆரம்பித்தது.
அதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அவருடைய ரசிகர்கள் பலரும் பிற்பகலுக்கு மேல் ரைபிள் கிளப்பிற்கு முன் குவியத் தொடங்கினர். திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க, திருச்சி ரைபிள் கிளப் வாசல் திருவிழாக் கோலம் பூண்டது. இதையடுத்து ரைபிள் கிளப் வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ‘தல’யை வெளிய வரச் சொல்லுங்க, அவரைப் பார்க்காம நாங்க இங்கிருந்து கிளம்ப மாட்டோம்… என ரசிகர்கள் சீறிப்பாய, கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் போலீஸார் திணறிப் போயினர். இதற்கிடையே ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நடிகர் அஜித்குமார் வெளியே வந்து தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டுச் செல்ல, ரசிகர்கள் கூட்டம் ‘தல… தல’ என கத்தி ஆர்ப்பரித்து அதிர வைத்தனர்.
நடிகர் அஜித்குமாரைப் பார்த்த உற்சாகத்தில் ரைபிள் கிளப் முன்பு ரசிகர்கள் கத்திக் கூச்சல் போட்டதோடு, உற்சாக நடனமாடி குதூகலித்தனர். ரசிகர்களின் காத்திருப்பையும், ஆர்ப்பரிப்பையும் போலீஸாரும் ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பாளர்களும் நடிகர் அஜித்குமார் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதையடுத்து மாலை 6 மணியளவில் ரைபிள் கிளப் கட்டிடத்தின் மேல் ஏறி நின்ற அஜித்குமார், தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தம்ஸ்அப் காட்டியதோடு, சில முத்தங்களையும் பறக்க விட்டார். அவ்வளவு தான்… ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் ‘தல… தல’ என விண்ணதிரும் அளவுக்கு கோஷமிட ஆரம்பித்தனர். ஐஸ்வர்யா என்ற பெண்மணி கைக்குழந்தையுடன் அஜித்குமாரை பார்க்க மணிக்கணக்கில் காத்திருக்க, விஷயமறிந்து அந்தப் பெண்மணியை குடும்பத்தோடு அழைத்த அஜித் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியதோடு, ஃபோட்டோவும் எடுத்து அனுப்பி வைத்தார்.
இதையறிந்து ‘நாங்களும் தல கூட ஃபோட்டோ எடுக்காம நகர மாட்டோம்’ என ரசிகர்கள், ரைபிள் கிளப்பை விட்டு நகராமல் நின்றிருந்தனர். ஒருகட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க வேறு வழி தெரியாமல், போலீஸார் லேசான தடியடியை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ‘நடிகர் அஜித்குமார் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்’ என்ற தகவல் சமூக வளைத்தளங்களில் பரவியது. அதையடுத்து அவரைக் காணவேண்டும் என கோயில் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அஜித்குமார் வரவில்லை. அன்றைய தினம் நடிகை யாஷிகா ஆனந்த் தான் வந்திருந்தார். நடிகர் அஜித்குமார் வருவதாகச் சொன்ன தகவல் பொய் எனத் தெரிந்ததும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இந்நிலையில், திருச்சி ரைபிள் கிளப்பிற்கு வந்த அஜித்குமாரை அவரை ரசிகர்கள் பார்த்து கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.