நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்கள் போட்டி அமளி – இரு அவைகளும் ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக இரு அவை களும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.  இன்று இரு தரப்பினரும் போட்டிப்போட்டுக்கொண்டு அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. கோடிக்கணக்கான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில்  அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல விலைவாசி உயர்வு, பணவீக்கம், அக்னிபாதை திட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியதால் அவைகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மேலும், அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை அவைத்தலைவர் சஸ்பெண்டு செய்து வருகிறார். இதுவரை 24 எம்.பி.க்கற் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் இரவுபகல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் சோனியாகாந்தியும் கலந்துகொண்டார். அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.  காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரியின் குடியரசு தலைவர் குறித்து  ‘ராஷ்டிர பத்னி’ கருத்துக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவையில் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எதிராக அக்கட்சியின் ஆதிர் சௌத்ரியின் ‘ராஷ்டிரபத்னி’ கருத்துக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, “அவர் ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுவிட்டார்” என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினர். ஆனால்,  அதை ஏற்க மறுத்த பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சோனியா காந்தி, நீங்கள் திரௌபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்தீர்கள். மிக உயர்ந்த அரசியல் சாசனப் பதவியில் பெண் ஒருவரை அவமானப்படுத்துவதற்கு சோனியா ஜி அனுமதி அளித்துள்ளார் என்று கூறியதுடன், எம்பி ஆதிர் சவுத்ரியின் ‘ராஷ்டிரபத்னி’ கருத்துக்கு  சோனியா காந்தி மன்னிப்பு கேட்க  வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு தரப்பினரும் அமளியில் ஈடுபட்டதால்  மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளியில் உள்ள காந்திசிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், அவையில் ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பிய நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.