டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்றும் அவையில் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல விலைவாசி உயர்வு, பணவீக்கம், அக்னிபாதை திட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியதால் அவைகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட சுமார் 23 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவையில் அமளி மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய போது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியதால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்பொழுதும், தொடர்ந்து அதிகரித்த முழக்கத்தால் அவை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளியில் உள்ள காந்திசிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சுசில் குமார், குப்தா சந்தீப் குமார் உள்பட 3 உறுப்பினர்கள் இந்த வார முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவை மையப்பகுதிக்கு சென்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை துணை சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்கு, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவிக்கையில், குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, ‘ராஷ்ட்ரபத்னி’ என தவறுதலாக கூறிவிட்டேன். வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியாகாந்தியை ஏன் இதில் இழுக்க வேண்டும்? குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயார் எனக் கூறினார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.