நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் கூட்டத்தொடருக்கு இடையே, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியா, தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, அனில் பிரோஜியாவின் ஐந்து வயது மகள் அஹானாவிடம், ‘நான் யார் என்று உனக்கு தெரியுமா?’ என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த குழந்தை, ‘ஓஹ் நன்றாக தெரியுமே,! நீங்கள் மோடி ஜி,! நான் உங்களை தினமும் டிவியில் பார்க்கிறேன்.’ என்று பதிலளித்துள்ளது. இதையடுத்து, நான் என்ன செய்கிறேன் என்று உனக்கு தெரியுமா என பிரதமர் மோடி அந்த குழந்தையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு உடனே பதிலளித்த அந்த குழந்தை, நீங்கள் லோக்சபாவில் வேலை பார்க்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இதனைக் கேட்ட பிரதமர் மோடி உள்பட அங்கிருந்த அனைவருமே வாய் விட்டு வயிறு குலுங்க சிரித்துள்ளனர்.
பிரதமர் மோடியுடனான தனது குடும்பத்தின் சந்திப்பு குறித்து பெருமிதமாக ட்வீட் செய்துள்ள அனில் பிரோஜியா, “உலகின் மிகவும் பிரபலமான தலைவர், நாட்டின் வெற்றிகரமான பிரதமர், மிகவும் மரியாதைக்குரிய நரேந்திர மோடியை குடும்பத்தினருடன் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், “எனது இளைய மகள் அஹானா மற்றும் மூத்த மகள் பிரியான்ஷி இருவரும் மரியாதைக்குரிய பிரதமரை நேரடியாகச் சந்தித்து அவரது அன்பை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் எடை குறைப்புக்காக தேசிய அளவில் வைரலானவர் அனில் பிரோஜியா. அனில் பிரோஜியா தனது தொகுதி வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நிதி வழங்கும்படி கோரியபோது, நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நகைச்சுவையாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இதையடுத்து, இதையடுத்து, தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அனில் பிரோஜியா சுமார் 15 கிலோ எடையை குறைத்தார். இதன் மூலம் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.15,000 கோடியை நிதின் கட்கரியிடம் கேட்க தனக்கு உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.