நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டது தெங்குமரஹாடா கிராமம். இந்த கிராமத்துக்கு செல்ல நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை கடக்க வேண்டும். மேட்டுப்பாளை யத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் சென்று, அங்கிருந்து சுமார் 25 கி.மீ.,அடர்ந்த வனப்பகுதி வழியாக தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்த கிராமத்துக்குச் செல்ல, கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் தான் உள்ளன.
அடர்ந்த வனத்துக்குள் பயணிக்கும் இந்தப் பேருந்துகள் தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழையமுடியாத அளவுக்கு இடையில் கல்லாம்பாளையம் வழியாக ஓடும் மாயாறு குறுக்கிடுகிறது. இதனால்,ஆற்றுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தப்பட்டு விடும். ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் செல்ல முடியும்.
தடையாக உள்ள சாலை
விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சாலை பெரும் தடையாக இருக்கிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 25 கி.மீ., செல்லும் மண் பாதை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த பாதையை தார் சாலையாக மாற்ற முடியாத நிலை உள்ளது.
சாலை வசதியில்லாததாலும், குழந்தைகளின் மேற்படிப்புக்கு போதிய வசதிகள் இல்லாததாலும், மருத்துவ வசதிகள் இல்லாததாலும் மக்கள் பலர் தெங்குமரஹாடா கிராமத்திலிருந்து வெளியேறி விட்டனர். தற்போது பவானிசாகரில் உள்ள சிலரே தெங்குமரஹாடாவில் தங்கி விவசாயம் மேற்கொள்கின்றனர்.
பாலம் தேவை
நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் தற்போது மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டுஓடுகிறது. இதனால் தெங்குமரஹாடா பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலை மற்றும் மருத்துவம்போன்ற தேவைகளுக்கும் பவானிசாகர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆற்றைக் கடக்க பாலம் கட்ட வேண்டும் என்பது மட்டுமே இந்த கிராம மக்களின் கோரிக்கையாகும்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும் போது, ‘‘ஆற்றை கடக்க பாலம் அமைத்தால் தான் நாங்கள் ஊருக்குள் வர முடியும். மழை காலங்களில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து பரிசலில் ஆற்றை கடப்பது ஆபத்தானதாகிவிடுகிறது. இதனால், வெளியூர் செல்லும் மக்கள் அங்கேயே தங்கி விட்டு, பின்னர் தான் ஊர் திரும்புகின்றனர்.
எங்கள் கிராமம் சமவெளிப்பகுதியில் இருக்கும் நிலையில், அரசுப் பணிகளுக்கு 100 கி.மீ., தாண்டி கோத்தகிரி செல்ல வேண்டும். அலுவல் பணி முடிந்து கடைசி பேருந்தை தவறவிட்டால், அங்கேயே தங்கி விட்டு மறுநாள் காலையில் தான் திரும்ப முடியும்’ என்றனர்.
தடையாக உள்ள வனத்துறை
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும் போது,‘தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லம்பாளையம் ஆகிய கிராமங்களில் 1900 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் பல ஆண்டு காலமாக கல்லம்பாளையத்தில் பாலம் கட்ட வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து அரசுக்கு தெரிவித்து, கல்லம்பாளையத்தில் பாலம் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டது.
பாலம் கட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திடம் ஆன்லைனில் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சில தெளிவுரைகளை கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ளோம். வனத்துறையின் தடையில்லா சான்றுகிடைத்ததும் பாலம் கட்டுமானப்பணிகள் நடக்கும். அதே போல,கல்லம்பாளையம் முதல் தெங்குமரஹாடா வரையிலான சாலையை சீரமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டு, அப்பணியை வனத்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு துறைகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.