பேரூராட்சித் தலைவர் பதவியி லிருந்து விலகுமாறு என்னை திமுக நகரச் செயலாளரும், அவரது மகனும் மிரட்டுகின்றனர், என இளையான்குடி பெண் பேரூராட்சித் தலைவர் புகார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அவர் கவுன்சிலர் தேர்தலில் தோல்வி அடைந்தார். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த செய்யது ஜமீமா தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தோல்வி அடைந்த நஜூமுதீன் மீண்டும் போட்டியிடுவதற்காக 13-வது வார்டு திமுக கவுன்சிலர் மிர்ஷா தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சமீபத்தில் நடந்த 13-வது வார்டு இடைத்தேர்தலில் நஜூமுதீன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நேற்று நடந்த இளையான்குடி பேரூராட்சிக் கூட்டத்தில் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் பேரூராட்சித் தலைவர் செய்யது ஜமீமா, கவுன்சிலர் நஜூமுதீன் (திமுக நகரச் செயலாளர்), அதிமுக கவுன்சிலர் நாகூர்மீரான் ஆகிய 3 பேர் மட்டுமே பங்கேற்றனர். பெரும்பான்மை இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் செய்யது ஜமீமா கூறியதாவது: 13-வது வார்டில் நஜுமுதீன் வெற்றி பெற்றதிலிருந்து என்னை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது மகன் ஆரிப், எனது கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது.
இப்பிரச்சினை குறித்து அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனிடம் பேச அழைத்தேன். ஆனால் வர மறுக்கிறார். தற்போது குறுக்கு வழியில் கூட்டத்துக்கு கவுன்சிலர்களை வரவிடாமல் தடுக்கிறார். இதனால் வேறு வழியின்றி செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
எனக்கும், எனது குடும்பத் துக்கும் பாதுகாப்பு இல்லை. மேலும் இப்பிரச்சினையை பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் தீர்த்து வைக்க வேண்டும். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சொன்னால் நான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன், என்றார்.
இது குறித்து நஜூமுதீன் கூறுகையில், நான் அவரை மிரட்டவில்லை. நான் வெற்றிபெற்றால், அவர் ராஜினாமா செய்வதாகக் கூறியிருந்தார். இருந்தாலும் நான் அவரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் வராததற்கு நான் காரணமில்லை, என்றார்.