புதுடெல்லி,
பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான கேட்பரி ஜெம்ஸ் என்ற பெயரில் மிட்டாய்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொருளாக விளங்கியது.
குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் பொருளாக கேட்பரியின் தயாரிப்பான ஜெம்ஸ் மிட்டாய் இருந்து வருகிறது. அவற்றின் பல வண்ணங்களும், கைக்கு அடக்கமான உருளை வடிவமும் கண் கவரும் விதத்தில் அமைந்து குழந்தைகள் மிகவும் கவர்ந்தன.
இந்நிலையில், கேட்பரியின் தயாரிப்பான ஜெம்ஸ் மிட்டாய் போலவே அச்சு அசலாக ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரில் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வந்தது நீரஜ் புட் புராடக்ட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, எங்கள் நிறுவன தயாரிப்புகளை போலவே அவர்களது பொருட்கள் உள்ளன. அவர்கள் அதற்கான உரிமத்தை எங்களிடம் இருந்து பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில் அந்த சாக்லேட் போலவே தயாரித்து, கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பெயரைச் சூட்டி விற்பனை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 2005ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. சுமார் 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பிரதீபா சிங் தலைமையிலான அமர்வு கூறுகையில், கேட்பரி நிறுவனத்தின் ஜெம்ஸ் மிட்டாய்களை குழந்தை பருவத்தில் இருந்து அனைவருக்குமே நன்கு அறிமுகமான ஒன்று. ஆகவே குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதேபோன்று இருப்பது சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபனம் ஆகி உள்ளது. அவர்கள் அதற்கான உரிமத்தை பெறாமல் விற்பனை செய்தது குற்றம். எனவே உரிய இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கேட்பரியின் தாய் நிறுவனமான மாண்டலஸ் இந்தியா லிமிடெட்க்கு நஷ்ட ஈடாக இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனம் இந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.