புதுச்சேரி: “மத்திய அரசின் உத்தரவின்படி 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய புதுச்சேரி மாநில அரசு கண்காணிப்பு குழுவைக் கூட நியமிக்கவில்லை” என்று திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியது: “நம் நாட்டில் ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டு காலமாக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 14 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு நீண்ட காலமாக சிறையில் இருந்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் அவர்களது தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் எந்தவித அரசியலும் இல்லாமல் தகுதியான கைதிகளை விடுதலை செய்கின்றனர். புதுச்சேரியில் கைதிகளை விடுதலை செய்ய முதல்வர் தலைமையில் ஆலோசனை குழுவும் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் சிறைக்கைதிகள் விடுதலை செய்வதிலும் அரசியல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது கடந்த முறை இந்த ஆலோசனை குழு பரிந்துரைத்தும் சிலர் விடுதலை செய்யப்படவில்லை.
இதனால் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், நாட்டின் சுதந்திர தின 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கை கைதிகள், தண்டனை காலத்தை நிறைவு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள், பாதிக்கும் மேற்பட்ட தண்டனை காலத்தை சிறையில் கழித்த மாற்றுத் திறனாளிகள், அபராத தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநில அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசின் உத்தரவின்படி 75ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசு கண்காணிப்பு குழுவைக்கூட நியமிக்கவில்லை. இது சரியானது அல்ல.
எனவே 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் சிறை கைதிகளை விடுதலை செய்ய உடனடியாக மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். மேலும் சில தினங்களிலேயே அக்குழுவின் பரிந்துரையை பெற்று புதுச்சேரி சிறைக்கைதிகளை சுதந்திர தினத்திற்கு முன்பாக விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று சிவா கூறியுள்ளார்.