மோசடி புகாரில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து மீண்டும் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.29 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதனிடையே, கடந்த வாரம் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெண் உதவியளர் அர்பித்தா முகர்ஜியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பணத்தை எண்ண முடியாமல் அருகில் இருந்த வங்கி அதிகாரிகளை அழைத்து வந்து அப்போது பணம் எண்ணப்பட்டது. முடிவில், ரூ.21 கோடி பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியையும், அவரது உதவியாளர் அர்பித்தா முகர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
தங்கள் அமைச்சர் கைது செய்யப்பட்ட போதிலும் திரிணமூல் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் பெரிய அளவில் தலையிடவில்லை.
மீண்டும் ரெய்டு
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அர்பித்தா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை மீண்டும் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறை கையோடு பணம் எண்ணும் இயந்திரங்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதனால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாக எண்ணப்பட்டது. அப்போது மொத்தமாக ரூ.29 கோடி ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM